search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

    கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு அமைச்சகம் பங்களிப்பு - ராஜ்நாத் சிங் ஆய்வு

    கொரோனா தொற்றின் இந்த இரண்டாவது அலையைக் கையாள்வதில் பாதுகாப்பு அமைச்சகம் உதவிக்கரம் நீட்டி தனது பங்களிப்பை செய்து வருகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா நெருக்கடியை கையாள்வதில் பாதுகாப்பு அமைச்சகம் அளித்து வருகிற பங்களிப்பை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

    நாடு கொரோனா தொற்றுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறது. கொரோனா தொற்றின் இந்த இரண்டாவது அலையைக் கையாள்வதில் பாதுகாப்பு அமைச்சகம் உதவிக்கரம் நீட்டி தனது பங்களிப்பை செய்து வருகிறது.

    முப்படைகளும், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளும், பெருகி வரும் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாள்வதற்கு தங்களது ஆதரவை பல்வேறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கி வருகின்றன.

    கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இந்திய விமானப்படை, அத்தியாவசிய மருந்து பொருட்களையும், சாதனங்களையும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து செல்கிறது.

    கோப்புப்படம்


    நேற்று சி-17 என்ற விமானப்படை போக்குவரத்து விமானம் சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் சென்றடைந்தது. நாட்டில் ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க அதிக திறன்கொண்ட ஆக்சிஜன் கொள்கலன்களை அது கொண்டுவர உள்ளது.

    இந்த நிலையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று காணொலி காட்சி வழியாக ஒரு உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத். ராணுவ தளபதி எம்.எம். நரவனே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கொரோனா நெருக்கடியை கையாள்வதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் பங்களிப்பு எப்படி உள்ளது, இன்னும் எந்தெந்த வகையில் முப்படைகளும் உதவலாம் என்பது குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ததாக தெரிகிறது. எனினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
    Next Story
    ×