search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
    X
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

    அனைவருக்கும் இலவச தடுப்பூசி - மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

    18 வயதான அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதே நாட்டின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.’’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
    புதுடெல்லி:

    ‘‘மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பாரபட்சமானது. 18 வயதான அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதே நாட்டின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.’’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

    நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அலைகள், காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 19-ந் தேதியன்று, புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கையை அறிவித்தது. இது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே மாதம் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியை வழங்குகிறது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.

    அந்தக் கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    புதிய கொரோனா தடுப்பூசி கொள்கையால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஆண்டு கற்றுக்கொண்ட கடினமான படிப்பினைகள் மற்றும் நமது குடிமக்களுக்கு ஏற்பட்ட வேதனைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும், ஒரு தன்னிச்சையான, பாரபட்சமான கொள்கையை அரசு பின்பற்றுகிறது என்பது வியப்பை அளிக்கிறது. இது தற்போதைய சவால்களை மேலும் அதிகரிக்க உறுதி அளிப்பதாகவே இருக்கிறது.

    இந்த தடுப்பூசி கொள்கையின் விளைவாக, தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான இந்திய சீரம் நிறுவனம், ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 என மாறுபட்ட விலைகளை அறிவித்துள்ளது.

    இதன் அர்த்தம், இந்த அதிகபட்ச விலையை செலுத்த பொதுமக்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இது மாநில அரசுகளின் நிதியையும் சுண்டி இழுக்கும்.

    இதனால், ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது, ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிற ஒரே தடுப்பூசிக்கு எவ்வாறு 3 விலைகளை நிர்ணயிக்க முடியும்? இதுபோன்ற தன்னிச்சையான வேறுபாட்டை அனுமதிக்கும் எந்தவொரு செயலும் நியாயம் இல்லை.

    முன்எப்போதும் இல்லாத வகையிலான இந்த கால கட்டத்தில், மக்களின் துயரங்களில் இருந்து இத்தகைய வெட்கக்கேடான லாபத்தை மத்திய அரசு எவ்வாறு அனுமதிக்க முடியும்?

    மருத்துவ வளங்கள் பற்றாக்குறை, ஆஸ்பத்திரிகளில் படுக்கையின்மை, ஆக்சிஜன் வினியோகமும் அத்தியாவசியமான மருந்துகள் கிடைப்பதும் வேகமாக குறைந்து வருதல் ஆகிய ஒரு நெருக்கடியான தருணத்தில், உணர்வற்ற ஒரு கொள்கையை அரசு ஏன் அனுமதிக்கிறது?

    மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை, 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் பொறுப்பை மத்திய அரசு கைவிட்டு விட்டதை காட்டுகிறது.

    இது இளைஞர்கள் மீதான பொறுப்பை மத்திய அரசு முற்றிலும் கைவிடுவதாகும்.

    நியாயமாக செயல்படும் யாரும், தடுப்பூசிக்கு ஒரே சீரான விலையைத்தான் ஏற்றுக்கொள்வார். எனவே இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, மோசமான இந்த முடிவை மாற்றியமைக்க வேண்டும்.

    18 வயதான அனைவருக்கும், அவர்களது பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இலவச தடுப்பூசி வழங்குவதே நாட்டின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி கூறி உள்ளார்.
    Next Story
    ×