search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் திண்டாடும் டெல்லி - பிரதமர் உதவ கெஜ்ரிவால் கடிதம்

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால் திண்டாடி வரும் டெல்லி அரசு, ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளுக்காக மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதித்து உள்ளனர். இதனால் டெல்லி ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

    நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகள் அனைத்தும் திக்குமுக்காடி வருகின்றன. மாநில அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுகளில் 100-க்கும் குறைவான படுக்கைகளே காலியாக உள்ளன. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழி தெரியாமல் மாநில அரசு திண்டாடி வருகிறது.

    மாநிலத்தில் தொற்று சதவீதம் 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள முதல்-மந்திரி கெஜ்ரிவால், இதனால் மாநிலத்தில் ஒவ்வொரு கணமும் நிலைமை மோசமாகிக்கொண்டே போவதாக கெஜ்ரிவால் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார்.

    பிரதமர் மோடி


    எனவே இந்த நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு மத்திய அரசை அவர் மன்றாடி உள்ளார். மாநிலத்தில் படுக்கை வசதியும், ஆக்சிஜன் கையிருப்பும் கரைந்து வருவதாக கூறியுள்ள கெஜ்ரிவால், எனவே படுக்கைகளும், ஆக்சிஜன் வசதிகளையும் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 10 ஆயிரம் படுக்கைகளில் வெறும் 1800 படுக்கைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையை 7 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.

    மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள படுக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் நிரம்பி விட்டதை சுட்டிக்காட்டியுள்ள கெஜ்ரிவால், மாநிலத்தில் எழுந்துள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையையும் எடுத்துக்கூறியுள்ளார்.

    முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் நேற்று காலையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்துக்கு கூடுதல் படுக்கைகள் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் இன்றி தவிக்கும் டெல்லி அரசு, கடந்த ஆண்டைப்போல ரெயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அவற்றில் 5 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ரெயில்வே துறையை கேட்டுக்கொண்டு இருக்கிறது.

    குறிப்பாக ஆனந்த் விகார் மற்றும் சாகுர் பஸ்தி ரெயில் நிலையங்களில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்துமாறு ரெயில்வேத்துறை தலைவர் சுனீத் சர்மாவுக்கு டெல்லி தலைமை செயலாளர் விஜய் குமார் தேவ் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு 503 ரெயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி ரெயில்வே வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கும்பமேளாவுக்கு சென்று டெல்லி திரும்பும் பக்தர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்காக தங்கள் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுமாறும் அறிவுறுத்தி உள்ளது.

    தவறும் பக்தர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Next Story
    ×