search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினை - பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

    மராட்டியத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டும் நிலையில், கொத்து கொத்ததாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது.
    மும்பை:

    ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் தேர்தல் பிரசார வேலையில் தீவிரம் காட்டுவதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

    மராட்டியத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டும் நிலையில், கொத்து கொத்ததாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது.

    இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல நோயாளிகளின் உயிரின் கதி கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

    பிரதமர் மோடி


    தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆக்சிஜன் பிரச்சினை தீவிரமாக உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக பேச பிரதமரை தொடர்பு கொண்டேன். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார். மராட்டியத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனையும் மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்பி விட்டு உள்ளோம். ஆனாலும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கும் என கணிக்க முடியாது. 3-வது அலை ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும். இதற்காக தொழில் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான் தொழில் நிறுவனங்களை தொடர்ந்து நடத்திட முடியும். பொருளாதார பாதிப்பு தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆக்சிஜன் பிரச்சினையில் மராட்டிய அரசையும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கடுமையாக சாடி இருந்தார். மராட்டிய அரசு திறனின்றியும் மற்றும் ஊழலாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×