search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா.
    X
    தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா.

    மத்திய அரசிடம் நிவாரணம் கேட்ட தொழில் அதிபர் வாங்கிய காரின் விலை என்ன தெரியுமா?

    பிர்லா குழுமத்தின் கீழ் செயல்படும் வோடோபோன் ஐடியா சந்தைப்போட்டி மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கியை செலுத்தும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    மும்பை:

    இந்தியாவின் பாரம்பரிய மிக்க வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றாக பிர்லா குழுமம் திகழ்கிறது.

    இந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கம், தொலைதொடர்பு துறை, வாகன உற்பத்தி துறை, கட்டுமான துறை, சூப்பர் மார்க்கெட் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    இந்த நிலையில் பிர்லா குழுமத்தின் அதிபரும், இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவருமான குமார் மங்கலம் பிர்லா ரூ.9 கோடிக்கு புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அதுவும் அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட மாடலை தேர்வு செய்து வாங்கி உள்ளார்.

    மும்பை சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இந்த காரை படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் குமார் மங்கலம் பிர்லா பெயரில் இருக்கிறது. கடந்த மாதம் 23-ந் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ரூ.7.95 கோடி ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாலை வரி மற்றும் இதர கட்டணங்கள் உட்பட கிட்டதட்ட ரூ.9 கோடி அடக்க விலை கொண்டதாகும்.

    ரூ.9 கோடி விலை கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை படத்தில் காணலாம்.


    சாதாரண கோஸ்ட் காரைவிட இந்த கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்ட மாடல் ரூ.1 கோடி கூடுதல் விலை கொண்டது. இதன் பின்புற இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் ஒரு அறையில் அமர்ந்து இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

    புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் இ.டபிள்யூ.பி. மாடலில் ஏராளமான வசதிகள் உள்ளன. சாதாரண கோஸ்ட் காரை விட இந்த காரின் கதவுகள் பெரியது. இதனால் ஏறி, இறங்குவதற்கு சுலபமாக இருக்கும்.

    சொகுசான இருக்கைகள் கொண்டது. இந்த காரில் மது வகைகளை வைத்துக்கொள்வதற்கான சிறிய குளிர்சாதன பெட்டி இருக்கிறது.

    குமார் மங்கலம் பிர்லா மிக நீண்ட காலமாக பி.எம்.டபிள்யு 7 சீரிஸ் சொகுசு காரையே பயன்படுத்தி வந்தார். தற்போது ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மாடலுக்கு மாறி இருக்கிறார்.

    மேலும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பி.எம்.டபிள்யு கார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருவதுடன் பி.எம்.டபிள்யு கார்களின் கட்டமைப்பு கொள்கையானது ரோல்ஸ்ராய்ஸ் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

    பிர்லா குழுமத்தின் கீழ் செயல்படும் வோடோபோன் ஐடியா சந்தைப்போட்டி மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கியை செலுத்தும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    நஷ்டத்தில் இயங்கும் வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் வர்த்தகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு குமாரமங்கலம் பிர்லா கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் தான் தற்போது ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கி உள்ளார். 

    Next Story
    ×