search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை மெரின் டிரைவ் பகுதி சாலை வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    மும்பை மெரின் டிரைவ் பகுதி சாலை வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

    மகாராஷ்டிராவில் பொதுவெளியில் நடமாட தடை எதிரொலி: சாலைகள் வெறிச்சோடின

    மகாராஷ்டிரா முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், பொதுவெளியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடின.
    மும்பை :

    நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. மகாராஷ்டிராவை இந்த அலை புயல் போல வீசி துவம்சம் செய்து வருகிறது.

    நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் தினசரி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது.

    இந்தநிலையில் மகாராஷ்டிராவில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தாா். இந்த கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்தது. மாநில அரசின் உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசியம் இன்றி பிற தேவைகளுக்காக வெளியே வர கூடாது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதலே பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். இதே நிலை நேற்று காலை முதலும் நீடித்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் கிழக்கு, மேற்கு விரைவுசாலைகள், எஸ்.வி. ரோடு, சி.எஸ்.எம்.டி. தாதர், அந்தேரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் குறைந்த அளவில் தான் வாகனங்கள் காணப்பட்டன.

    மார்க்கெட் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி, மளிகை கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. பார்சல் மூலம் விற்பனை செய்ய அனுமதி அளித்த இருந்த போதும் பல பகுதிகளில் ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன.

    கட்டுப்பாடுகளுடன் ஆட்டோ, டாக்சிகள் இயக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆட்டோவில் டிரைவர் மற்றும் 2 பயணிகள், டாக்சியில் 50 சதவீத பயணிகளுக்கு அனுமதி அளிக்க்பபட்டு இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், ஆட்டோ, டாக்சிகள் சாலைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தான் ஓடின.

    மேலும் அத்தியாவசிய பணிக்கு நகரில் பஸ், ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. பஸ், ரெயில்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்களில் ஓரளவு கூட்டம் காணப்பட்டது. மதிய நேரங்களில் வழக்கம்போல மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. வெளியூர் செல்லும் ரெயில்கள் வழக்கம் போல ஓடின. குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று மும்பையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகனங்களில் சென்றவர்களை உாிய விசாரணைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதித்தனர். உரிய காரணங்கள் இன்றி பயணம் செய்தவர்களை எச்சரித்து வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

    அதேவேளையில் கட்டுப்பாடுகளை புறம்தள்ளி ஒருசில பகுதிகளில் மக்கள் வீதிகளில் இயல்பாக நடமாடினர். மாலை நேரத்தில் சாலைகளில் சற்று வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது.

    இதில் தாராவி உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வந்ததை காண முடிந்தது. அவர்கள் பழம், உணவுப்பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி மார்க்கெட் பகுதிகளில் திரண்டனர். பலர் முககவசம் கூட அணியாமல் சுற்றியதையும் காணமுடிந்தது.

    இதேபோல நேற்று தானே, புனே உள்பட மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மும்பை உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கூடுதலாக 13 ஆயிரத்து 200 ஊர்காவல் படை வீரர்கள், மாநில ரிசர்வ் படையை சேர்ந்த 22 கம்பெனி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் இந்த கெடுபிடி மே 1-ந் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×