search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி அசோக் கெலாட்
    X
    முதல் மந்திரி அசோக் கெலாட்

    கொரோனா அதிகரிப்பு - ராஜஸ்தானில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்

    இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நேற்று 6 ஆயிரத்து 658 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 49 ஆயிரத்து 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து அம்மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 633 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் ராஜஸ்தானில் இதுவரை 3 ஆயிரத்து 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இன்று மாலை முதல் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 19) காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் போடப்பட்டுள்ள இந்த முழு ஊரடங்கில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கின் போது அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, அம்மாநிலத்தில் திங்கட்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ராஜஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களிலும் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×