search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்காக வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

    இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன.
    புதுடெல்லி:

    இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே, நிலைமை மோசமாவதை தவிர்க்க, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஒரு நிபுணர் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

    அதுபோல், மேலும் பல தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதினார்.

    இந்த பின்னணியில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, பிற நாடுகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்தபோதிலும், அவை முதலில் பயனாளிகளிடம் சோதித்துப் பார்க்கப்படும். முதலில் செலுத்தப்படும் 100 பயனாளிகள், 7 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள். தடுப்பூசி பாதுகாப்பானதா என்று இதன்மூலம் முடிவு செய்யப்படும். பிறகுதான் முழுஅளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.


    இந்த முடிவால், வெளிநாட்டு தடுப்பூசிகள் இந்தியாவில் விரைவாக கிடைக்க வழி ஏற்படும். தடுப்பூசி பணிகள் வேகமெடுக்கும். உள்நாட்டு பயன்பாட்டுக்கான மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசின் முடிவு வழிவகுக்கிறது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தால் அவசர பயன்பாட்டுக்கென பட்டியலிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தயாரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.
    Next Story
    ×