search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் - எய்ம்ஸ் இயக்குனர் கருத்து

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததும், உருமாறிய கொரோனாவும்தான் இந்தியாவில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்று ‘எய்ம்ஸ்’ இயக்குனர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, 1 லட்சத்து 69 ஆயிரத்தை தொட்ட நிலையில், இதற்கான காரணங்கள் குறித்து ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. உடனே மக்கள் மெத்தனமாகி விட்டனர். கொரோனா செயலிழந்து விட்டதாக நினைத்து, விதிமுறைகளை பின்பற்ற தவறினர்.

    நோயை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். வெளியே போய் பார்த்தால், சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என எல்லாவற்றிலும் கூட்டமாக உள்ளது. இவைதான் நோயை பெரிய அளவில் பரப்பும் காரணிகள்.

    முன்பெல்லாம், ஒருவருக்கு கொரோனா வந்தால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு தொற்றை பரப்பி விடுவார்.

    ஆனால், இப்போது ஒரு கொரோனா நோயாளி ஏராளமானோருக்கு நோயை பரப்பி விடுகிறார். அந்த அளவுக்கு கொரோனா பரவல் விகிதம் வேகமாக உள்ளது. இதற்கு எளிதாகவும், அதிகமாகவும் பரவக்கூடிய மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் காரணம்.

    ஒட்டுமொத்த மனித இனமே கடினமான தருணத்தில் உள்ளது. முக்கியமான வேலை இன்றி வெளியே செல்லாதீர்கள். கூட்டம் சேரக்கூடாது.

    கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுங்கள். அலட்சியமாக செயல்பட்டால், இதுவரை கிடைத்த பலன்களையும் இழக்க நேரிடும். நிலைமை கை மீறி சென்று விடும்.

    நிலைமையை சரிசெய்யாவிட்டால், கொரோனா பரவல் விகிதம், நாட்டின் சுகாதார வசதிகள் மீது பெரும் கறையை உண்டாக்கி விடும். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அது கொரோனா வருவதை தடுக்காது. இருப்பினும், கொரோனா வந்தால், நோய் தீவிரம் அடைவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×