search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா- மம்தா அறிவிப்பு

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

    இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. 

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணிநேரம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஏப்ரல் 12) இரவு 8 மணி முதல் நாளை (ஏப்ரல் 13) இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    இந்நிலையில், தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் தடை விதித்ததற்கு மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அவர் நாளை காந்திசிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
    இந்திய தேர்தல் ஆணையம்
    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நான் நாளை மதியம் 12 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்’ என்றார்.
    Next Story
    ×