search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யுங்கள் - மத்திய கல்வி மந்திரிக்கு பிரியங்கா காந்தி கடிதம்

    கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் லட்சக்கணக்கான குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் தேர்வு மையங்களில் கூடி தேர்வு எழுதுவதில் பயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்லை என்பதால் சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யுங்கள் என்று மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

    கொரோனாவின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. இந்த தருணத்தில் சி.பி.எஸ்.இ. என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குரல் கொடுத்துள்ளார்.

    இதையொட்டி அவர் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் வலியுறுத்திக் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ரமேஷ் பொக்ரியால்


    கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக தேர்வு எழுத அமர வைத்து, அந்த தேர்வு மையத்தில் நிறைய குழந்தைகளுக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டு, அது தீவிர பகுதியாக மாறினால் அதற்கு மத்திய அரசும், சி.பி.எஸ்.இ. வாரியமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இதையொட்டி நோயால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்கோ அல்லது பிறருக்கோ ஏற்படுகிற பாதிப்புக்கு மத்திய அரசும், சி.பி.எஸ்.இ. வாரியமும் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க பரிசீலிக்க விரும்புகின்றனவா?

    நாடு முழுவதும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தினமும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிற நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் லட்சக்கணக்கான குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் தேர்வு மையங்களில் கூடி தேர்வு எழுதுவதில் பயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    இந்த சூழலில் குழந்தைகளை தேர்வு எழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களது பயம் சரியானதுதான் என்பது நிரூபணமாகும்.

    எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் மாணவர்களின் சரியான கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக அரசாங்கம், பள்ளிகளுடன், மாணவர்களுடன், அவர்களது பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும், அதன்மூலமாக அவர்களது கல்வி கடமைகளை நிறைவேற்ற பாதுகாப்பான வழியைக் கண்டறியும் என நம்புகிறேன்.

    அரசியல் தலைவர்களாக நமது பொறுப்பு, அவர்களை பாதுகாப்பதும், வழிநடத்துவதும் ஆகும்.

    கூட்டம் கூடுகிற தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சாத்தியம் இல்லை. எனவே சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரையும். 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும் நடத்தப்படுபவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×