search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டெல்லியில் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    டெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780- பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் வைரஸ் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினருக்கும் தொற்று பரவி வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாக்டர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் பணியாற்றிவந்த டாக்டர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வைரஸ் உறுதி செய்யப்பட்ட டாக்டர்களில் 32 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். எஞ்சிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கங்காராம் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மருத்துவமனை தலைவர் ராணாவுடன் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

    அரவிந்த் கெஜ்ரிவால்

    கொரோனா உறுதி செய்யப்பட்ட டாக்டர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்கனவே செலுத்திக்கொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×