search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பிரமாண்ட வாகன பேரணி - பா.ஜ.க. வெற்றி உறுதி என பேட்டி

    மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 4-ம் கட்ட தேர்தல் வரும் 10-ந் தேதி 44 தொகுதிகளில் நடைபெறுகிறது.
    கொல்கத்தா:

    மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 4-ம் கட்ட தேர்தல் வரும் 10-ந் தேதி 44 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    இதையொட்டி அங்குள்ள சிங்குரில் நேற்று பிரமாண்ட வாகன பேரணியை பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா நடத்தினார்.

    அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் அமித்ஷா, சிங்குர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ரவீந்திரநாத் பட்டாச்சார்யாவுடன் வலம் வந்தார்.

    சாலையோரங்களிலும், வீடுகளின் உச்சியிலும், மாடங்களிலும் நின்று மக்கள், அமித்ஷாவின் வாகன பேரணியை பார்த்தனர். அவர்களை நோக்கி அமித்ஷா புன்னகைத்தவாறு கையசைத்தார்.

    பேரணி நடந்த துலேபாரா மோரே தொடங்கி சிங்குர் போலீஸ் நிலையம் வரையில் வண்ண பதாகைகள், சுவரொட்டிகள், பா.ஜ.க. கொடிகள், பச்சை, சிவப்பு நிற பலூன்கள் என வண்ணமயமாய் காட்சி அளித்தது.

    பேரணியின் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷங்கள் முழங்கப்பட்டது. தொழில்மயம் ஆக்க வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்டது.

    இந்த வாகன பேரணியின் இடையே அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2006-ம் ஆண்டில் இருந்து இங்கு தொழில்துறை முடங்கி உள்ளது. அடுத்த பா.ஜ.க. அரசு, இந்தப் பகுதியை முன்னேற்றும். இங்கு தொழில் நிறுவனங்களை உருவாக்குவோம். உருளைக்கிழங்கு தொழில் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும்.

    தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க.அரசு வரும்போது, சிறு, நடுத்தர, பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களை இங்கு உருவாக்குவோம். மோதல் அரசியலுக்கு பதிலாக நாங்கள் வளர்ச்சி அரசியலை, பேச்சு வார்த்தை அரசியலை, ஒத்துழைப்பு அரசியலை தொடர்வோம்.

    இந்து கடவுள்கள் பற்றி குறிப்பிடுவதுடன், சண்டி மந்திரம் ஓதுவதாக மம்தா பொதுமேடைகளில் கூறுவதை வரவேற்கிறேன். ஆனால் இது தாமதமான ஒன்று.

    200 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பா.ஜ.க. உறுதியாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×