search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    ஊரடங்கு வேண்டாம் என்றால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்: மந்திரி சுதாகர்

    கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களில் அதிகமாக நடுத்தர வயது உடையவர்கள் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நமது நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களில் அதிகமாக நடுத்தர வயது உடையவர்கள் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். முதல் அலையை விட கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.

    இதன் தீவிர தன்மையை இப்போது கணிக்க முடியாது. ஆனால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராகியுள்ளோம். கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 33 ஆயிரத்து 697 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் 15 ஆயிரத்து 733 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 83 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை 20 சதவீதமாக உயர்த்தும்படி உத்தரவிட்டுள்ளோம். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பே நிபுணர் குழு, அறிக்கை வழங்கியது. தியேட்டர்கள் உள்பட பொது இடங்களில் என்னென்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் ஊரடங்கு உள்பட கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது. அதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை வைரஸ் தொற்று தாக்கினால், அவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை வைரஸ் தாக்காது என்பது உண்மை அல்ல. தடுப்பூசி பெறாதவர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அதிகளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் தகுதியானவர்கள் அனைவரும் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    சுகாதார ஊழியர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அதனால் சுகாதார ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஊரடங்கு வேண்டாம் என்றால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தீவிரமாக கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×