search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு - அசாமில் அதிர்ச்சி சம்பவம்

    அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஹப்லாங் தொகுதியில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
    கவுகாத்தி:

    அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஹப்லாங் தொகுதியில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் கோட்லிர் பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச்சாவடியில் தகுதிவாய்ந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை 90 ஆகும். ஆனால் வாக்குப்பதிவு முடித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதித்த போது, 171 வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, அந்த வாக்குச்சவாடியில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். மேலும் அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த 5 அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    அந்த வாக்குச்சாவடிக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்த வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்திருந்த கிராம தலைவர், தானே ஒரு வாக்காளர் பட்டியலை கொண்டு வந்து அதன்படி மக்களை ஓட்டுப்போட வைத்ததாக தேர்தல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    அவர் கொடுத்த வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் ஏன் ஏற்றுக்கொண்டனர்? என்பது குறித்தும், இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் பங்கு என்ன? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    90 வாக்காளர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவான சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×