search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா 2-வது அலை 20 நாளில் உச்சம் தொடும்- விஞ்ஞானிகள் தகவல்

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.ஐ.டி. குழுவினர் வெளியிட்ட கணிப்பில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு நோய் முற்றிலும் குறைந்து விடும் என்று கூறியிருந்தார்கள்.
    புதுடெல்லி:

    கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. தற்போது தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதிலும் மும்பை மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அங்கு மட்டுமே தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேல் இருக்கிறது. தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதே நிலை தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள 2-வது அலை பரவல் தொடர்பாக கான்பூர் ஐ.ஐ.டி. துணை இயக்குனர் மகேந்திர அகர்வால் கணித ரீதியாக கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி வரும் நாட்களில் தினசரி பாதிப்பு 80 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை உயரும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது 10-ல் இருந்து 15 சதவீதம் வரை பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும்.

    ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதிக்குள் 2-வது அலை உச்சத்தை தொடும் என்று மகேந்திர அகர்வால் கூறினார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது. அதே போன்ற நிலை வரலாம் என்று அவர் கூறினார்.

    ஆனால் இந்த மாத இறுதியில் நோய் பரவல் மீண்டும் வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.ஐ.டி. குழுவினர் வெளியிட்ட கணிப்பில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு நோய் முற்றிலும் குறைந்து விடும் என்று கூறியிருந்தார்கள்.

    அதே போல நோய் பாதிப்பு வேகமாக குறைந்து வந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    மகேந்திர அகர்வால் மேலும் கூறும்போது, “2 காரணங்களால் தற்போது 2-வது அலை உருவாகி உள்ளது. பொதுமக்கள் தாராளமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டதும், பள்ளி-கல்லூரி திறக்கப்பட்டதும் ஒரு காரணம்.

    பணிபுரியும் இடங்களில் பொதுமுடக்க காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள், சமூக இடைவெளிகள் குறைந்து விட்டன. தற்போது அவர்கள் நெருக்கமாக பணிபுரியும் நிலை உருவாகி உள்ளது. இதுவும் 2-வது அலை உருவாக முக்கிய காரணமாகும்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களுக்கு நோய்பரப்பும் விகிதம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவும் நோய் தொற்று அதிகமாவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூறினர்.
    Next Story
    ×