search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்- மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

    2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.
    புதுடெல்லி:

    பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    இதில் அதிகபட்சமாக 1.1 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் ஓராண்டு கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல 2 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 0.5 சதவீதமும், 3 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 0.4 சதவீதமும், 5 ஆண்டுகால வைப்பு நிதி திட்டங்களுக்கு 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைத்து 5.9 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்ட வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

    கிசான் விகாஸ் பத்திரங்களின் ஆண்டு வட்டிவிகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாக்கப்பட்டு இருக்கிறது. சேமிப்பு வைப்புத்தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் முதல் முறையாக 0.5 சதவீதம் குறைத்து 3.5 சதவீதமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.



    இந்த நிலையில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை நேற்று நிதியமைச்சகம் குறைத்த நிலையில் இன்று அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என டுவிட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×