search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜியை தொண்டர் ஒருவர் தொலைவில் இருந்து மண்டியிட்டு வணங்கும் காட்சி.
    X
    மம்தா பானர்ஜியை தொண்டர் ஒருவர் தொலைவில் இருந்து மண்டியிட்டு வணங்கும் காட்சி.

    மம்தா பானர்ஜி தொகுதியில் 144 தடை உத்தரவு - மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று 30 தொகுதிகளில் நடக்கிறது.
    நந்திகிராம்:

    மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று (வியாழக்கிழமை) 30 தொகுதிகளில் நடக்கிறது.

    அவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். போட்டி கடுமையாக இருப்பதால், எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    எனவே, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக, நந்திகிராம் தொகுதி முழுவதும் தேர்தல் கமிஷன் நேற்று 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுவரை இது அமலில் இருக்கும்.

    இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோப்புப்படம்


    மிக மிக முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நந்திகிராம் பதற்றம் நிறைந்த தொகுதியாக உள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இந்த தொகுதியின் வாக்காளர் அல்லாத யாரும் தேர்தல் முடியும்வரை உள்ளே நுழைய அனுமதி கிடையாது. ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் சேரக்கூடாது.

    தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் நன்றாக பரிசோதிக்கப்படும். வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. பதற்றத்தை உருவாக்க முனைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஹெலிகாப்டர் மூலமாக வான்வழி கண்காணிப்பிலும் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. 22 கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் நாளில் 22 பேர் கொண்ட விரைவு அதிரடிப்படையும் பணியில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    144 தடை உத்தரவு காரணமாக, நந்திகிராம் தொகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆட்டோ, ரிக்‌ஷா போன்ற வாகனங்கள் ஓடவில்லை.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    ஹல்டியா துணைக்கோட்ட போலீஸ் அதிகாரி பருன் பைத்யா, புர்பா மெடினிபூர் மாவட்டம் மகிஷாடல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிசித்ரா பிகாஸ் ஆகியோரை தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு இடமாற்றம் செய்யுமாறு மாநில தலைமை செயலாளருக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் எழுதிய கடிதத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.

    சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற அசாமில் இன்று 2-வது கட்ட தேர்தலை சந்திக்கிற 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. வேட்பாளர்களில் 5 பேர் மந்திரிகள், ஒருவர் துணை சபாநாயகர்.

    பா.ஜ.க. அசாம் கணபரிசத் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அசாம் ஜாதிய பரிசத் என மும்முனை போட்டி நிலவுகிறது.

    73 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்காக 10 ஆயிரத்து 592 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 310 கம்பெனி மத்திய போலீஸ் படை குவிக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இங்கும் கொரோனா கால விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×