search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி திரும்பிய பிரதமர் மோடி
    X
    டெல்லி திரும்பிய பிரதமர் மோடி

    வங்காளதேசம் பயணம் முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றார்.
    புதுடெல்லி:

    வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார்.

    பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கினார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வந்து பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின் 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் அந்நாட்டின் ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அதன்பின் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கும்படி காளியிடம் வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

    துங்கிப்பாரா என்னுமிடத்தில் உள்ள ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அந்த வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார்.

    ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயத்தை பிரதமர் மோடிக்கு வங்காளதேச  பிரதமர் ஷேக் ஹசீனா வழங்கினார். வங்காள தேச சுதந்திரத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட வெள்ளி நாணயத்தையும் அவர் வழங்கினார்.

    12 லடசம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவின் பரிசின் அடையாளமாக பிரதமர் மோடி வங்காளதேச  பிரதமர் ஷேக் ஹசீனாவிடம்  ஒப்படைத்தார். மேலும், இருநாட்டு பிரதமர்களும் டாக்காவிற்கும் புதிய ஜல்பைகுரிக்கும் இடையில் 'மிட்டாலி எக்ஸ்பிரசை தொடங்கி வைத்தனர்.

    பிரதமர் மோடி வங்காளதேச  அதிபர் அப்துல் ஹமீதை டாக்காவில் சந்தித்து பேசினார். இந்தியா- வங்காள தேச உறவை மேலும் மேம்படுத்த இந்தியாவும் வங்காளதேசமும் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

    இந்நிலையில், தனது வங்காள தேச பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு டாக்காவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் பயணம் வங்காளதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×