search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சியமைப்பது உறுதி - அமித்ஷா பேச்சு

    அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    ஜோனாய்:

    அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

    அங்கு ஆளும் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று 3 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் போட்டியிடும் மஜூலி, ஜோனாய் உள்ளிட்ட இடங்களில் அவர் உரையாற்றினார். இந்த பிரசாரத்தின்போது எதிர்க்கட்சியான காங்கிரசை அவர் கடுமையாக சாடினார்.

    ஜோனாய் கூட்டத்தில் உரையாற்றும்போது அமித்ஷா கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சியில் இருந்தபோது போராட்டம், வன்முறை, குண்டுவெடிப்பு, மரணம், ஊரடங்கு போன்றவை வழக்கமான நடைமுறைகளாக இருந்தன. அனைத்து மட்டத்திலும் கிளர்ச்சி தலைவிரித்தாடியது.

    ஆனால் பா.ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களிடம் இருந்து அசாம் பாதுகாப்பாக இருக்குமா? மேலும் அதிக ஊடுருவல்காரர்கள் அசாமில் நுழைவதை மக்கள் விரும்புவார்களா?

    அசாமியர்களுக்கும், வங்காளிகளுக்கும் இடையே காங்கிரஸ் கட்சி பிளவை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி பிளவை உண்டாக்கி இருக்கிறது. பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கொண்டிருக்கிறது.

    ஆனால் பா.ஜனதாவோ அனைத்து சிறிய சமூகங்களையும் இணைத்து வளர்ச்சியின் மூலம் அவர்களிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    எனவே மாநிலத்தில் அமைதியும், வளர்ச்சியும் தொடர வேண்டுமா? என்பதை முடிவு செய்யும் ஒரு தேர்தல் ஆகும். எம்.எல்.ஏ.க்களையோ, முதல்-மந்திரியையோ தேர்வு செய்யும் தேர்தல் அல்ல, மாறாக வளர்ச்சிப்பணிகள் தொடரவும், அசாமின் பெருமையும், மகிமையும் அதிகரிக்கவும் வாக்களிக்கும் தேர்தல் ஆகும்.

    அந்தவகையில் மக்களிடம் கரைபுரண்டோடும் உற்சாகத்தில் இருந்தே, பா.ஜனதா இங்கே 2-வது முறையாக ஆட்சியமைக்கப்போவது உறுதி என்பது புலப்படுகிறது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.
    Next Story
    ×