search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, பாகிஸ்தான் தேசியக்கொடிகள்
    X
    இந்தியா, பாகிஸ்தான் தேசியக்கொடிகள்

    சிந்து நதி நீர் பகிர்வு... 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் நாளை பேச்சுவார்த்தை

    இரு நாடுகளின் சிந்து நதி ஆணைய உறுப்பினர்கள் கடைசியாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லாகூரில் சந்தித்து பேசினர்.
    புதுடெல்லி:

    சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960-ல் கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக நீடித்த ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி தரவுகளை பகிர்ந்துகொள்வதற்காகவும், ஒப்பந்தப்படி நீரை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காகவும் நிரந்தர சிந்து ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆணையமானது ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்தித்து பேசவேண்டும்.

    கடைசியாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளின் சிந்து நதி ஆணைய உறுப்பினர்கள் லாகூரில் சந்தித்து பேசினர். அதன்பின்னர், புல்வாமா தாக்குதல் காரணமாக 2019ல் கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கூட்டம் நடத்தப்படவில்லை.

    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் கூட்டம் நாளையும் நாளை மறுதினமும் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளின் தூதுக்குழு வாகா எல்லை வழியாக இந்தியா வந்து சேர்ந்தது. 

    பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையர் சையத் முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான தூதுக்குழு, இந்தியாவின் சிந்து நதி ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

    லடாக்கில் இந்தியாவின் திட்டமிடப்பட்ட நீர் மின் திட்டங்கள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் நீர் மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

    ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு காண முடியும் என்றும் இந்திய சிந்து நதி ஆணையர் சக்சேனா நம்பிக்கை தெரிவித்தார்.

    Next Story
    ×