search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிணாமுல் காங்கிரசில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா
    X
    திரிணாமுல் காங்கிரசில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா

    திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் தலைவர்... காரணம் இதுதான்

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்த, 2024-க்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்பட வேண்டும் என யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி தலைவர்கள் பலர் பாஜகவுக்கு தாவி உள்ளனர். இது திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா (வயது 83) இன்று ​​திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன் மற்றும் சந்தானு சென் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். தேர்தலுக்கு முன்னதாக யஷ்வந்த் சின்ஹா, திரிணாமுல் காங்கிரசில் இணைந்திருப்பது அந்த கட்சியினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பின்னர் யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது:-

    கடந்த 10ம் தேதி முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு பின்னர் கட்சியில் சேர்ந்து, அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தேன். இன்று காலை மம்தாவை சந்தித்து ஒரு மணி நேரம் பல விஷயங்களைப் பற்றி பேசினேன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்த, 2024-க்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்பட வேண்டும்.

    நாடு ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறது. ஜனநாயகத்தில் நாம் முன்னுரிமை அளித்த விஷயங்கள் இப்போது நெருக்கடியில் உள்ளன. முக்கியமான நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. இது நமது ஜனநாயகத்திற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். நமது விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராடுகிறார்கள். ஆனால் யாரும் கவலைப்படுவதில்லை. நீதித்துறை அமைப்புகள் கூட இப்போது பலவீனமாகிவிட்டன.

    வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால் இன்றைய அரசாங்கம் எதிர்ப்பாளர்களை நசுக்குவதையும் வெல்வதையும் நம்புகிறது. அகாலி தளம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளன. இன்று, பாஜகவுடன் யார் நிற்கிறார்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    யஷ்வந்த் சின்கா 2018ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×