search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலாம் நபி ஆசாத், கபில் சிபல்
    X
    குலாம் நபி ஆசாத், கபில் சிபல்

    மேற்கு வங்காள தேர்தலுக்கான காங்கிரஸ் பேச்சாளர்கள் பட்டியல் - புறக்கணிக்கப்பட்ட ஜி 23 தலைவர்கள்

    மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக 30 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் ஆகியோர் உள்ளனர்.

    மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகமது அசாருதீன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித், ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட், முன்னாள் கிரிக்கெட்டர் நவ்ஜோத் சிங் சித்து, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் , ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்ட ஜி 23 தலைவர்களில் ஒருவரின் பெயரும் இடம்பெறவில்லை.
    Next Story
    ×