search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரமேஷ் ஜார்கிகோளி
    X
    ரமேஷ் ஜார்கிகோளி

    நான் இருக்கும் ஆபாச வீடியோ 100 சதவீதம் போலியானது: ரமேஷ் ஜார்கிகோளி

    பாலியல் புகாருக்கு உள்ளான முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, தன் மீது குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ 100 சதவீதம் போலியானது. எனக்கு எதிராக சிலர் சதி செய்து, இந்த வீடியோ சி.டி.யை வெளியிட்டுள்ளனர். இதற்காக சதித்திட்டம் தீட்டியவர்கள் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். அந்த சதியை செய்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். இந்த சதித்திட்டம் பெங்களூருவில் 2 இடத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது மாடி மற்றும் ஓரியன் வணிக வளாகம் அருகில் உள்ள கட்டிடத்தின் 5-வது மாடியில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை மட்டும் நான் சொல்கிறேன்.

    என்னுடன் வீடியோவில் இருந்ததாக கூறப்படும் அந்த பெண்ணுக்கு ரூ.5 கோடி மற்றும் வெளிநாட்டில் ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தெளிவாக கூற முடியாது. இந்த வீடியோ வெளியான பிறகு பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சியினரும் எனக்கு ஆதரவாக நின்றனர். இதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா, குமாரசாமி உள்பட அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா உள்பட தேவேகவுடா குடும்பத்தினர் என்னிடம் பேசி எனக்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டணி ஆட்சியை நான் கவிழ்த்தேன் என்ற கோபம் என் மீது அவருக்கு இருந்திருந்தால், அவர் ஏன் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும்?. குமாரசாமி ஆட்சியை நான் கவிழ்க்கவில்லை. ஆட்சியை கவிழ்த்தவர்கள் யார் என்பது அவருக்கு தெரியும்.

    இந்த ஆபாச வீடியோ பின்னணியில் 4 பேர் இருந்து செயல்பட்டுள்ளனர். இத்தகைய ஆபாச வீடியோ குறித்த தகவல் எனக்கு 4 மாதங்களுக்கு முன்பே தெரியும். நான் தவறே செய்யவில்லை. எனக்கும், அந்த சி.டி.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அப்போதே நான் சொன்னேன்.

    அந்த சி.டி. வெளியாவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து எனக்கு ஒருவர் போன் செய்து, பேசி ஆபாச வீடியோ வெளியிட சிலர் திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆனால் நான் தவறு செய்யாததால், தைரியமாக இருந்தேன். இத்தகைய 10 புகார்களை கொடுத்தாலும் நான் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்தாலும் என்னை யாராலும் வெல்ல முடியாது. அதனால் எனக்கு எதிராக சதி செய்துள்ளனர்.

    எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, எனக்கு எதிராக சதி செய்தவர்களை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன். சட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறேன். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. எங்கள் குடும்பத்தின் மரியாதையை காப்பாற்ற வேண்டியது முக்கியம் ஆகும்.

    இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
    Next Story
    ×