search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி
    X
    கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி

    மேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு

    அடுத்த 25 ஆண்டுகள் வங்காளத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என கொல்கத்தா பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்திவிட்டு இந்த தடவை ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மம்தா கட்சியில் இருந்து ஏராளமானவர்களை பா.ஜனதா இழுத்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பிரதமர் மோடி இன்று முதன்முதலாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்க மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மம்தா பானர்ஜி செயல்படவில்லை. அவர் உங்கள் நம்பிக்கையை சிதைத்துவிட்டார். மாநிலத்தில் மாற்றத்திற்கான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் விட்டுவிடவில்லை.

    வங்காளத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், இங்கு முதலீட்டை அதிகரிக்கவும், வங்காள கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், மாற்றத்தைக் கொண்டுவரவும் நான் இன்று இங்கு வந்துள்ளேன். விவசாயிகள், வணிகர்கள் மற்றும் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் என உங்களை நம்ப வைக்கவே இங்கு வந்துள்ளேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற ஒவ்வொரு தருணமும் செயல்படுவோம்.

    இந்த சட்டமன்றத் தேர்தலில், ஒருபுறம் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் மற்றும் அவர்களின் வங்காள விரோத அணுகுமுறை உள்ளன. மறுபுறம், வங்காள மக்கள் உள்ளனர்.

    அடுத்த 25 ஆண்டுகள் வங்காளத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். 2047 ஆம் ஆண்டில், இந்தியா 100வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, வங்காளம் மீண்டும் நாட்டை வழிநடத்தும். அடுத்த 5 ஆண்டுகளில் இங்குள்ள வளர்ச்சி, அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×