search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பு விரைவில் வெளியீடு

    முக்கியமான தலைப்புகளில் விழிப்புணர்வு உள்பட ஏராளமான புதிய தகவல்களை சேர்த்து மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகி வருவதாக பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி தேர்வை எழுதுவதற்கும், தேர்வு தொடர்பான மன அழுத்தங்களை கையாளவும் வழிகாட்டும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

    ‘தேர்வு போர் வீரர்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த புத்தகம் 15 மொழிகளில் வெளியிடப்பட்டன. அத்துடன் இதன் பிரெய்லி பதிப்பும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

    தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், இந்த புத்தகத்தில் பல்வேறு புதிய அம்சங்கள், அதாவது பெற்றோருக்கான மந்திரங்கள், மனநலம், தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் நேர மேலாண்மை போன்ற முக்கியமான தலைப்புகளில் விழிப்புணர்வு உள்பட ஏராளமான புதிய தகவல்களை சேர்த்து மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகி வருகிறது. இந்த புத்தகம் இந்த மாதம் வெளியிடப்படும் என பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் கூறியுள்ளது.

    இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு குறித்து கடந்த மாதம் ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் கூறியிருந்தார். அவர் கூறுகையில், ‘தேர்வு போர் வீரர் புத்தகத்தில் மேலும் சில புதிய மந்திரங்களை சேர்ப்பதற்கு இந்த தொற்றுநோய் காலம் சிறிது நேரத்தை கொடுத்தது. அந்தவகையில் பெற்றோருக்கு சில மந்திரங்கள், அதைப்போல நரேந்திர மோடி செயலி தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை மாணவர்களுக்குள்ளே இருக்கும் தேர்வு போர் வீரனை கிளர்ந்தெழச்செய்யும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த புதிய பதிப்பு குறித்து பென்குயின் நிறுவனம் கூறுகையில், ‘மாணவர்கள் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சந்திக்கும் சவால்களை சமாளிக்க ஒரு முறையான அணுகுமுறையை இந்த புதிய பதிப்பு முன்மொழிகிறது. அத்துடன் தன்னுடனேயே போட்டியிடுவது, தன்னைக் கண்டுபிடிப்பது, நேர மேலாண்மை, தொழில்நுட்பம், நன்றியுணர்வு மற்றும் இலக்கு அமைத்தல் போன்ற பல்வேறு கருப்பொருள்களைத் தொடும்’ என்று கூறியுள்ளது.
    Next Story
    ×