search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லட்சுமண் சவதி
    X
    லட்சுமண் சவதி

    கர்நாடகத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.26.87 கோடி அபராதம் வசூல்

    கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 34 ஆயிரத்து 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.26.87 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் லட்சுமண் சவதி கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக மேல்-சபையில் நேற்று உறுப்பினர் ஆர்.பிரசன்னகுமார் கேட்ட கேள்விக்கு துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பதில் அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 34 ஆயிரத்து 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.26.87 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. 12 இருக்கைகள் கொண்ட வாகனங்கள், 19 இருக்கைகள் வரை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளின்படி ஒரு இருக்கைக்கு ரூ.700 கட்டணம் வசூலிக்கப்படும்.

    விதிமுறைகளை மீறி சில தனியாா் வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றி செல்லப்படுவதாக புகார் வருகிறது. அந்த வாகனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் பயணிகளை கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும். பயணிகளின் சேவைக்கு வர மறுத்தால் அத்தகைய ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சரக்கு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க போலீஸ் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் தற்போது 381 பஸ் நிலையங்களில் பெண்கள் ஓய்வு அறை உள்ளது. மீதமுள்ள பஸ் நிலையங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் பஸ் நிலையங்களில் பெண்கள் ஓய்வு அறைகள் கட்டப்படும். பெங்களூருவில் நிர்பயா திட்டத்தின் கீழ் பஸ் நிலையங்களில் பெண்கள் ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் குறைந்துவிட்டது. வருகிற பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். தாவணகெரேயில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பன்முக பயன்பாட்டுடன் கூடிய பஸ் நிலையங்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

    Next Story
    ×