search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவனந்தபுரம் அருகே கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

    திருவனந்தபுரம் அருகே பாறையில் படுத்திருந்த 2 வாலிபர்கள் கடல் அலையில் சிக்கி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது விழிஞம் ஆழிமலை கடற்கரை. சுற்றுலா தலமான இந்த கடற்கரையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் இருக்கிறது.

    இந்த கோவிலுக்கும், கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். கொரோனா பிரச்சனை காரணமாக தற்போது வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. ஆனால் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஆழிமலை கடற்கரைக்கு கேரள மாநிலம் கோயோடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் டி.குமார்(வயது29), ஆராலிமூடு பகுதியை சேர்ந்த அஸ்வின் தேஜி(29) ஆகிய இருவரும் காரில் வந்துள்ளனர். நண்பர்களான அவர்கள் கடற்கரையில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த பாறைக்கு சென்று படுத்து ஓய்வெடுத்துள்ளனர்.

    அப்போது ராட்சத அலை அடித்து, பாறையில் அமர்ந்திருந்த பிரகாஷ் டி.குமாரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அவர் கடலில் மூழ்கினார். இதனைப்பார்த்த அஸ்வின் தேஜி அதிர்ச்சியடைந்தார். அவர் கடலில் மூழ்கிய தனது நண்பரை காப்பாற்ற முயன்றார். அப்போதுஅவரும் கடலில் மூழ்கினார்.

    பாறையில் அமர்ந்திருந்த வாலிபர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றதை அந்த பகுதியில் வந்த மீனவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் அதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடலில் மூழ்கிய 2 வாலிபர்களும் கடற்கரையில் பிணமாக கரை ஒதுங்கினர். இதுகுறித்து விழிஞம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர்கள் இருவரின் உடலையும் பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    பாறையில் படுத்திருந்த 2 வாலிபர்கள் கடல் அலையில் சிக்கி இறந்த சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×