search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி

    மத்திய அரசு ‘கோ-வின்’ என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இதில் 25 லட்சம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இனிவரும் நாட்களில் தடுப்பூசி போடப்படும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

    முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு ஊசி போடும் பணி நடந்து வந்தது. அதில் இதுவரை 1 கோடியே 43 லட்சம் பேர் ஊசி போட் டுள்ளனர்.

    2-வது கட்டமாக பொது மக்களுக்கு ஊசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய்களுக்கு ஆளானவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

    நேற்று முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர், அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இதேபோல நாடு முழுவதும் 21 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதில் 11 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகளும் அடங்கும்.

    நாடுமுழுவதும் நேற்று 4 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று 2-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

    தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ‘கோ-வின்’ என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இதில் 25 லட்சம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இனிவரும் நாட்களில் தடுப்பூசி போடப்படும்.

    தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு நேரடியாக சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.

    இதற்கிடையே நோய் குறைந்துவிட்டது தடுப்பூசி போடவேண்டியதில்லை என்ற அலட்சியம் மக்கள் பலரிடம் காணப்படுகிறது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்‌ஷவர்தன் கூறும் போது, ‘நோய் குறைந்து விட்டதாக யாரும் கருதி அலட்சியமாக இருக்கக் கூடாது. அது எந்த நேரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    சில மாநிலங்களில் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. எனவே மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எந்த சமாதானத்துக்கும் இடமளிக்காமல் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

    Next Story
    ×