search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்
    X
    தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் ஆதரவு

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
    கொல்கத்தா:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு மற்றும் கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக பெட்ரோல் விலை நாட்டின் பல பகுதிகளில் சதம் அடித்து விட்டது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.11 என்ற நிலையில், சதத்தை நெருங்கி வருகிறது. இதைப்போல டீசல் விலை ரூ.86.45 ஆக இருந்தது.

    இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதைப்போல இந்த விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் துயரை சந்தித்து வருகின்றனர்.

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய-மாநில அரசுகள் விதிக்கும் அதிகமான வரியும் ஒரு காரணம் ஆகும். எனவே இந்த வரியை குறைத்து பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

    ஆனால் இதற்கு மத்திய-மாநில அரசுகள் மவுனம் சாதித்து வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் போன்றவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இதற்கு மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதானும் சமீபத்தில் ஆதரவு தெரிவித்து இருந்ததுடன், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அவர் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்திய முதல் நாளில் இருந்தே, பெட்ரோலிய பொருட்களையும் அதற்குள் கொண்டு வருமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தான் வலியுறுத்தி வருவதாகவும், இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு தற்போதும் வேண்டுகோள் விடுப்பதாகவும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

    இவ்வாறு ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், இந்த பரிந்துரைக்கு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியனும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் இதுதொடர்பாக கூறுகையில், ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது சிறந்த நடவடிக்கைதான். எனினும் இந்த விவகாரத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இவ்வாறு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரும் பரிந்துரைகளுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×