search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
    X
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

    இந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயார் - இம்ரான்கான் அறிவிப்பு

    இந்தியாவுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு இந்தியாவும் பதிலடி தொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறது. இதனால் எல்லை பகுதியில் அடிக்கடி உயிரிழப்புகளும், காயமடையும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்கதையாகி வருவதால் எல்லை பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குனர்கள் (டி.ஜி.எம்.ஓ.) சமீபத்தில் ஹாட்லைன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த திடீர் பேச்சுவார்த்தை சுமுக முடிவை கொண்டு வந்திருக்கிறது.

    அதன்படி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமலில் இருக்கும் அனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் வலிமையாக கடைப்பிடிப்பது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இது கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகள் கடந்த 2016-ம் ஆண்டு (பதன்கோட் தாக்குதலுக்கு பின்) முதல் சீரழிந்திருக்கும் நிலையில், இந்த திடீர் பேச்சுவார்த்தையும், அதில் ஏற்பட்டுள்ள சுமுக முடிவும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இதற்கு பல நாடுகளும் பாராட்டு தெரிவித்து உள்ளன.

    இந்த நடவடிக்கைகளை இந்தியாவும் வரவேற்று உள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் நேற்று வரவேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததன் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி தனது டுவிட்டர் தளத்தில் இம்ரான்கான் பல்வேறு பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

    அதில் இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடந்துள்ள பேச்சுவார்த்தை குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் மீண்டும் அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். நாங்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறோம். சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானியை திருப்பி அனுப்பி, எங்கள் பொறுப்பான நடத்தையை உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறோம்.

    இந்தியாவுடன் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு முன்னோக்கி செல்வதற்கு இன்னும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எனவே இருதரப்பு உறவுகளில் மேலும் முன்னேற்றம் காண, ஒரு செயல்படுத்தும் சூழலை உருவாக்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது.

    இந்த நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இம்ரான்கான் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அனைத்து சண்டை நிறுத்த ஒப்பந்தங்களையும் தீவிரமாக கடைப்பிடிப்பது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டபின் முதல் முறையாக இம்ரான்கான் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×