search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஆதரவு- மம்தா பானர்ஜி கேள்வி

    மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்ட தேர்தல் மார்ச் 27-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ந்தேதியும், 3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதியும், 4-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10-ந்தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17-ந்தேதியும், 6-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22-ந்தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ந்தேதியும், 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதியும் நடக்கிறது.

    8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலை மேற்கு வங்காள எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதேவேளையில் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேற்கு வங்காள மாநில பா.ஜனதா துணைத் தலைவர் ஜெய்பிரகாஷ் மஜும்தார் கூறுகையில் ‘‘நாங்கள் மகிழ்ச்சி. தேர்தல் நியாயமானதாகவும், நெருக்கடி இல்லாமலும் நடைபெற்று மக்கள் பயமின்றி அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

    காங்கிரஸ் தலைவர் மனோஜ் சக்ரபோர்த்தி கூறுகையில் ‘‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதால், 10 முதல் 12 கட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும்.

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலின்போது என் நடந்தது என்பதை நாம் பார்த்தோம். ஏராளமான பொதுமக்கள் வன்முறையால் உயிரிழந்தனர். அமைதியான முறையில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் என நம்புகிறோம்’’ என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுஜன் சக்ரபோர்த்தி ‘‘மேற்கு வங்காளத்தில் ஏழு அல்லது எட்டு கட்ட தேர்தல் போதாது. எந்தவிதமான மிரட்டல் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும்’’ என்றார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘தேர்தல் கமிஷன் முடிவுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மேற்கு வங்காளத்தில் ஏன் இத்தனை கட்டங்களாக அறிவிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையமே மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்றால், மக்கள் எங்கே செல்வார்கள்?.

    பா.ஜனதா விருப்பம் போல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனையின்படி தேதி அறிவிக்கப்பட்டதா?. பிரதமரும், உள்துறை அமைச்சரும் மாநிலத் தேர்தலுக்காக அவர்களுடைய பதவியை தவறாக பயன்படுத்தக் கூடாது’’ என்றார்.
    Next Story
    ×