search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ஈசுவரப்பா
    X
    மந்திரி ஈசுவரப்பா

    சித்தராமையாவை ராமரின் சாபம் சும்மா விடாது: மந்திரி ஈசுவரப்பா

    ராமர் கோவில் கட்டுவது குறித்து கணக்கு கேட்ட சித்தராமையாவையும், காங்கிரசையும் ராமரின் சாபம் சும்மா விடாது என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
    விஜயாப்புரா :

    கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் மந்திரி ஈசுவரப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நாடு முழுவதும் மக்களிடம் இருந்து நிதி பெறப்படுகிறது. மக்கள் தாமாக முன்வந்து நிதி அளித்து வருகிறார்கள். ராமர் கோவில் கட்டுவதற்காக பெறப்படும் நிதி குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும், காங்கிரஸ் கட்சியும் கணக்கு கேட்டு வருகிறது. எதற்காக கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை பற்றி சித்தராமையாவும், காங்கிரஸ் கட்சியினரும் தவறாக பேசி வந்தனர்.

    பசுக்களின் சாபத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருந்தது. முதல்-மந்திரி பதவியை சித்தராமையா இழந்திருந்தார். தற்போது ராமர் கோவில் கட்டுவது குறித்து சித்தராமையா கணக்கு கேட்டு வருகிறார். ராமரின் சாபம் சித்தராமையாவையும், காங்கிரசையும் சும்மா விடாது. நாட்டில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும். கடந்த சட்டசபை தேர்தலில் தனது சொந்த மாவட்டமான மைசூருவில் சித்தராமையா தோல்வி அடைந்ததை மறந்து விடக்கூடாது.

    இதற்கு முன்பு அஹிந்த அமைப்புகள் மூலமாக சித்தராமையா ஆட்சிக்கு வந்திருந்தார். தற்போது அதே அமைப்புகளால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று சித்தராமையா நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. சித்தராமையா ஆட்சியால் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர். இதனால் சித்தராமையாவால் மீண்டும் முதல்-மந்திரியாக முடியாது.

    யத்னால் எம்.எல்.ஏ. பா.ஜனதா கட்சியின் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மீது பத்திரிகையாளர்கள் முன்பு பகிரங்க குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. எந்த பிரச்சினையாக இருந்தாலும் கட்சிக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்சியின் தலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி பேசுவதால் கட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
    Next Story
    ×