search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    டெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு

    மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாகவே கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    அதன்பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. முககவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றியதால் கொரோனா பரவல் குறையத்தொடங்கியது.

    தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் காற்றில் பறக்க விட்டனர்.

    இதன்காரணமாக தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

    மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்குள்ள அமராவதி, அகோலா, யவத்மா ஆகிய 3 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புனே, நாசிக் ஆகிய இடங்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் டெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநில மக்கள் டெல்லிக்குள் நுழைய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    இந்த சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சான்றிதழ் இல்லாமல் வரும் இந்த 5 மாநில மக்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாடு வருகிற 26-ந்தேதி முதல் மார்ச் 15-ந் தேதி வரை தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லி அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    Next Story
    ×