search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ
    X
    சிபிஐ

    நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு- மம்தா உறவினரின் மனைவியிடம் சிபிஐ நேரில் விசாரணை

    நிலக்கரியை சட்டவிரோதமாக வெட்டி எடுத்த வழக்கு தொடர்பாக, மம்தா பானர்ஜி உறவினரின் மனைவியிடம் அவரது வீட்டுக்கு சென்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்து திருட்டில் ஈடுபட்டதாக அனுப் மாஜி என்ற லாலா என்பவர் மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நவம்பர் 28-ந் தேதி, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

    இந்த விவகாரத்தில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி.யின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது.

    இதையடுத்து, விசாரணையில் பங்கேற்குமாறு கடந்த 19-ந் தேதி அவரது வீட்டுக்கு சென்று சி.பி.ஐ. சம்மன் அளித்தது. அதற்கு பதில் அளித்த ருஜிரா, 23-ந் தேதி (நேற்று) காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் தனது இல்லத்துக்கு விசாரணை குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    ருஜிரா வீட்டுக்கு சி.பி.ஐ. குழு நேற்று செல்வதற்கு முன்பு, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அந்த வீட்டுக்கு திடீரென சென்றார். 10 நிமிடங்கள் இருந்த பிறகு கிளம்பிச் சென்றார்.

    அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்கு சி.பி.ஐ. குழு வந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு விஸ்வஜித் தாஸ், கூடுதல் சூப்பிரண்டு உமேஷ் குமார் ஆகியோர் தலைமையில் 2 பெண் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வந்தனர். 8 பக்கங்கள் கொண்ட கேள்விகளை தயாராக வைத்திருந்தனர்.

    நிலக்கரி சுரங்க ஊழல் பணம், ருஜிராவுக்கு வந்திருக்குமோ என்பதை அறியவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க விரும்பினர். எனவே, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு வங்கிக்கணக்கு பற்றியும், வேறு எங்கெங்கே அவருக்கு வங்கிக்கணக்கு இருக்கிறது என்பதையும், பாஸ்போர்ட், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட இதர விவரங்களையும் கேட்டறிந்தனர்.

    இந்த விசாரணை 80 நிமிடங்கள் நீடித்தது. பிறகு சி.பி.ஐ. குழு புறப்பட்டுச் சென்றது.

    இதே சி.பி.ஐ. குழுவினர், இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ருஜிரா பானர்ஜியின் சகோதரி மேனகா காம்பீரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம், லண்டன் வங்கிக்கணக்கு ஒன்றைப்பற்றி கேட்டனர்.
    Next Story
    ×