search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல்-மந்திரி பினராயி விஜயன்

    எல்லைகளை மூடிய கர்நாடகா : பிரதமர் உடனடியாக தலையிட பினராயி விஜயன் கடிதம்

    கேரளா உடனான எல்லைகளை கர்நாடகா மூடிய விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து பயணிகள் வருகைக்கு கர்நாடக அரசு நேற்று முன்தினம் முதல் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான 4 சாலைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நான்கு சாலைகள் வழியாகவும், கொரோனா இல்லை என்ற சான்றிதழை காட்டியபின்பே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகாவின் தட்சிண கன்னடா, மங்களூரு போன்ற எல்லைப்புற பகுதிகளுக்குச் செல்வோர் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக-கேரள எல்லையில் நீண்டவரிசையில் வாகனங்கள் தேங்கியுள்ளன.

    இந்நிலையில் இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘மாநில எல்லைகளை மூடியுள்ள கர்நாடக அரசின் நடவடிக்கையால், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள், சிகிச்சைபெறச் செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர் தேவையற்ற அவதிக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

    இவ்வாறு மாநிலங்களுக்கு இடையில் மக்கள் போக்குவரத்துக்கு தடை விதிப்பது, கொரோனா தொடர்பான மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு எதிரானது.

    எனவே தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×