search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் மோடி உறுதி

    இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆயுதங்களுக்கு இறக்குமதியை எதிர்பார்ப்பது இந்தியாவுக்கு பெருமை அல்ல என்றும் அவர் கூறினார்.

    மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற ராணுவம் தொடர்பான அறிவிப்புகளை அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று இணையவழியில் பேசினார். அவர் பேசியதாவது:-

    சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆயுத தொழிற்சாலைகள் இருந்தன. இரண்டு உலகப்போர்களின் போதும், இ்ந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு, ஆயுத தளவாட உற்பத்தியில் அக்கறை செலுத்தப்படவில்லை. எந்த அளவுக்கு ஆயுத தளவாட உற்பத்தியை வலுப்படுத்தி இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு செய்யப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    இதன் காரணமாக, இன்று ஒரு சிறிய ஆயுதத்துக்கு கூட பிற நாடுகளை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது. அதிகமாக ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. இது, பெருமைக்குரிய விஷயம் அல்ல. இந்தியர்களுக்கு ஆயுதம் உற்பத்தி செய்யும் திறமையோ, தகுதியோ இல்லை என்று அர்த்தம் அல்ல. கொரோனாவுக்கு முன்பு வென்டிலேட்டர்களை இந்தியா தயாரித்தது இல்லை. ஆனால், இப்போது ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்களை தயாரித்து வருகிறது.

    செவ்வாய் கிரகத்துக்கே இந்தியா செல்லும்போது, நவீன ஆயுதங்களை தயாரித்து இருக்க முடியும். ஆனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது சுலபமான வழியாகி விட்டது. இந்த நிலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

    ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இதற்காக மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    லைசென்ஸ் முறையை ரத்து செய்வது, கட்டுப்பாடுகளை நீக்குவது, ஏற்றுமதியை மேம்படுத்துவது, அன்னிய முதலீடுகளை தாராளமயமாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு துறைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முப்படை தலைமை தளபதி பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், தளவாடங்கள் கொள்முதலில் ஒரே அணுகுமுறையை பின்பற்றுவதும், ஆயுதங்களை படையில் சேர்ப்பதும் எளிதாகி விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×