search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது: மந்திரி சுதாகர்

    கொரோனா பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளர்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அண்டை மாநிலங்களான மராட்டியம் மற்றும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், கர்நாடக மக்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதற்கான நிலையும் நமது மாநிலத்தில் ஏற்படவில்லை. மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

    வருவாய்த்துறை, உள்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையால் மட்டும் அனைத்தையும் சாதித்து விட முடியாது. அனைத்து துறை அதிகாரிகளும் சேர்ந்து பணி செய்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். எனவே தான் வருவாய்த்துறை, உள்துறையின் உதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மராட்டியம், கேரள மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், கொரோனா விதிமுறைகளையும் ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    கர்நாடகத்தில் 10 மாவட்டங்கள் கேரளா, மராட்டிய மாநிலங்களின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. பெலகாவி, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா, மைசூரு, உப்பள்ளி-தார்வார், பீதர், ராய்ச்சூரு, கலபுரகி, பெங்களூரு புறநகர், உத்தரகன்னடா ஆகிய 10 மாவட்டங்கள் அண்டை மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    கேரளாவில் நேற்று (நேற்று முன்தினம்) புதிதாக 5,405 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 6,112 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் சமீபமாக 500-க்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கொரோனா பாதிப்பு கர்நாடகத்தில் குறைந்து வருகிறதே தவிர, நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த மாதம் (மார்ச்) இறுதி வரை கொரோனா பரவலை தடுக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி மக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    கொரோனா பரவலை தடுக்க இதற்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் அரசின் நிதி நிலை மற்றும் பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. கேரள, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும்.

    அதில், எந்த காலதாமதமும் செய்யப்படாது. எனவே எக்காரணத்தை கொண்டும் கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 51 சதவீத கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. அப்படி இருந்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. அரசு துறைகளில் பணியாற்றுபவர்களே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டினால், பொதுமக்கள் தடுப்பூசியை போட்டு கொள்ள எப்படி முன் வருவார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருக்கும் தயக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

    மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 558 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

    இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
    Next Story
    ×