search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் 22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் வருகிற 22-ந் தேதி 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் மதிய உணவு கொண்டு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    6-ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வரலாம். குடிநீரும் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையில் மட்டும் வகுப்புகளை நடத்த வேண்டும்.

    பெங்களூரு மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு மட்டும் தொடங்கப்படுகிறது. 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யாகம வகுப்புகள் மட்டும் வழக்கம் போல் வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்படும். மாணவர்கள் முதல் நாளில் தங்களின் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். பள்ளிகளில் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    அரசு பள்ளி-கல்லூரி விடுதிகளும் திறக்கப்படுகின்றன. அங்கு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் வருகையை பதிவு செய்வது வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×