search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அசாம்-மேகாலயா இடையே நாட்டிலேயே மிக நீளமான பாலம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

    நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப்பாலம் அசாம்-மேகாலயா இடையே ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நேற்று நாட்டினார்.
    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ரூ.3,231 கோடியில் அமைக்கப்பட உள்ள ‘மகாபாகு பிரம்மபுத்ரா’ திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

    ஜோகிகோபாவில் உள்நாட்டு நீர்வழி முனையம் அமைத்தல், பிரம்மபுத்ராவில் பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் இந்த திட்டத்தில் அடங்கியுள்ளன.

    மேலும் நீமதி-மஜூலி தீவு, வடக்கு-தெற்கு கவுகாத்தி, தப்ரி-ஹட்சிங்கிமர் இடையே படகு போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இதைத்தவிர அசாமின் தப்ரிக்கும், மேகாலயாவின் பல்பாரிக்கும் இடையே 19 கி.மீ. தொலைவுக்கு நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப்பாலம் ரூ.5 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும், ஜோர்காட்-மஜூலி பாலம் கட்டுமான பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    மேலும் அசாம் தலைநகர் கவுகாத்தியில் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் வடகிழக்கு தரவு மையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூரம் குறையும்

    மகாபாகு பிரம்மபுத்ரா திட்டத்தின் கீழ் நீர்வழி இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் வடகிழக்கை நாட்டின் பிற பகுதிகளுடனும், அண்டை நாடுகளுடனும் இணைப்பதற்கு மாற்று வழி ஏற்படுகிறது.

    பூபன் ஹசாரிகா சேது, போகிபீல், சரைகாட் போன்ற பல பாலங்கள் அசாம் மக்களின் வாழ்க்கையை இன்று எளிதாக்கி இருக்கிறது. அத்துடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி, வீரர்களுக்கு மிகப்பெரிய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன.

    தப்ரி முதல் பல்பாரி வரை 19 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள பாலம் பராக் பள்ளத்தாக்கில் இணைப்பு வசதியை மேம்படுத்தும். அத்துடன் மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம் இடையேயான தொலைவை குறைக்கும். குறிப்பாக மேகாலயா மற்றும் அசாம் இடையே சாலை வழியான தூரம் 250 கி.மீ. ஆகும். ஆனால் இந்த பாலத்தின் உதவியால் இது சுமார் 20 கி.மீ. ஆக குறையும்.

    விடுதலைக்கு முன் ஒரு மிகப்பெரிய தனிநபர் வருமானத்தை அசாம் மாநிலம் பெற்றிருந்தது. ஆனால் 1947-க்குப்பிறகு அசாமின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் அமைந்த அரசுகள் செய்த இந்த வரலாற்று பிழையை சரி செய்யும் நடவடிக்கைகள் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொடங்கியது.

    தற்போது இந்த பிழை திருத்தும் நடவடிக்கை வலிமையடைந்து இருக்கிறது. ஏனெனில் மத்திய பா.ஜனதா அரசு அதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது.

    மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் அமைந்துள்ள பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசுகள் மாநிலத்துக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையேயான புவியியல் மற்றும் கலாசார இடைவெளியை குறைத்திருக்கின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்
    Next Story
    ×