search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு - பஞ்சாபில் 7 மாநகராட்சிகளை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றியது

    பஞ்சாபில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடந்த 7 மாநகராட்சிகளையும் ஆளும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
    சண்டிகர்:

    பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 14-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    8 மாநகராட்சிகளிலும், 109 நகராட்சிகளிலும் தேர்தல் நடந்தது. அவற்றில் அடங்கிய மொத்தம் 2 ஆயிரத்து 302 வார்டுகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

    மொத்தம் 9 ஆயிரத்து 222 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 832 பேர் சுயேச்சைகள் ஆவர். வேளாண் சட்டங்கள் பிரச்சினையில் கூட்டணியை முறித்துக் கொண்ட பா.ஜனதாவும், அகாலி தளமும் தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், மொகாலி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வார்டுகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொகாலி மாநகராட்சியில் பதிவான வாக்குகள், இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன.

    எனவே, மொகாலி மாநகராட்சியை தவிர்த்து, இதர 7 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகளில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில், பதிண்டா, கபூர்தலா, ஹோசியார்பூர், பதான்கோட், படாலா, மொகா, அபோஹர் ஆகிய 7 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மை வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

    அதன மூலம் 7 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.

    நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் உள்ள 350 மாநகராட்சி வார்டுகளில் 281 வார்டுகளையும், 1,815 நகராட்சி வார்டுகளில் 1,199 வார்டுகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

    அகாலிதளம், 33 மாநகராட்சி வார்டுகளையும், 289 நகராட்சி வார்டுகளையும் கைப்பற்றியது. பா.ஜனதா 20 மாநகராட்சி வார்டுகளிலும், 38 நகராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
    Next Story
    ×