search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடக்கம்: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

    கர்நாடகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழுமையாக பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
    பெங்களூரு :

    பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் 9 முதல் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு வரை ஏற்கனவே வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் வித்யாகம திட்ட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை முழுமையாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு நகர் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள கர்நாடக பகுதிகளில் 8-ம் வகுப்பு முழுமையாக செயல்படும். அங்கு ஏற்கனவே நடைபெற்று வரும் வித்யாகம வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

    மாணவர்கள் முதல் நாளில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல. அதே போல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கும் வகுப்புகளை தொடங்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த விஷயத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில் அந்த குழந்தைகளுக்கு வகுப்புகளை தொடங்குவது குறித்து வருகிற 24 அல்லது 25-ந் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சுகாதாரத்துறை இனி பள்ளிகளில் சில குறிப்பிட்ட குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது என்பது கட்டாயமல்ல என்றாலும், 70 முதல் 89 சதவீதம் பேர் பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்.

    ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், 92 சதவீத குழந்தைகள் கணிதத்தில் பின்தங்கியுள்ளனர், 80 சதவீத குழந்தைகள் எழுத்துக்களையே மறந்துவிட்டனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதனால் தான் படிப்படியாக பள்ளிகளை திறந்து வருகிறோம். கர்நாடகத்தில் இதுவரை எந்த பள்ளியிலும் கொரோனா பரவவில்லை. அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2021-22) வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

    இந்த பேட்டியின்போது, பள்ளி கல்வித்துறை கமிஷனர் அன்புக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக மந்திரி சுரேஷ்குமார், சுகாதாரம் மற்றும் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×