search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மீண்டும் முழு ஊரடங்கு வரும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் கொரோனா வீழ்ச்சி அடைந்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்தை தாண்டி தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது கடந்த ஒரு மாதத்தில் அதிகப்பட்ச பாதிப்பாக அமைந்தது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 663 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 7 நாட்களாக மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரிக்கிறது.

    விதிமுறைகள் தளர்வு மற்றும் மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதது தான் மீண்டும் கொரோனா உயர்வுக்கு வழிவகுத்துள்ளது என கூறப்படுகிறது. தொற்று பாதிப்பு மீண்டும் தொடர்ந்து அதிகரித்து இருப்பது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை முதல்-மந்திரி அஜித்பவார், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே உடன் இருந்தனர்.

    ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    மாநிலத்தில் படிப்படியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சியம் கவலையளிக்கிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க போகிறீர்களா? அல்லது மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்கப்போகிறீர்களா? என்பதை தற்போது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    இவற்றை செய்யாவிட்டால் மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைமை வரும்.

    விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் நடமாடும் வாகனங்களை அதிகப்படு்த்த வேண்டும்.

    கொரோனா பிரச்சினையில் மக்கள் மனநிறைவு அடைந்து இருக்கலாம். ஆனால் அதிகாரிகள் பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதை கைவிட்டு விடக்கூடாது. பொது இடங்களில் கிருமி நீக்க நடவடிக்கையை தொடர வேண்டும். நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட இடங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

    ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சம் 20 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.

    திருமண விழாக்களுக்கு போலீஸ் அனுமதி பெறுவது அவசியம். ஓட்டல்கள், உணவகங்களின் நேரம் அதிகரிக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பி்னபற்றுவது அவசியம். விருந்து நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணியாமல் யாரும் திரிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தற்போதைய சூழலில் அனுமதி கொடுக்கக்கூடாது.

    சமூக நிகழ்வுகள், திருமணங்கள் போன்றவற்றில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத அரங்குகளின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

    இதற்கிடையே மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியதாவது:-

    மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மும்பை மாநகராட்சிக்கும், மாநில அரசுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மின்சார ரெயில் சேவை அதிகரித்தது, பல சேவைகள், நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தது தொற்று உயர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

    பெரும்பாலான மக்கள் முககவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை பின்பற்றாமல் உள்ளனர்.

    அதிகாரிகள் பள்ளிகளை திறக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் தற்போது அந்த முடிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல தொற்று பாதிப்பு அதிகரிப்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி ராஜேஸ் தோபே ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நாம் மீண்டும் ஊரடங்கை சந்திக்க நேரிடும். ஆனால் இதை தவிர்க்க பொது மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×