search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    விஜயாப்புரா வேகமாக வளர்ச்சி அடையும்: எடியூரப்பா

    விஜயாப்புரா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் சுற்றுலா துறை, விவசாயம் வேகமாக வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    விஜயாப்புரா மாவட்டத்தில் புதிதாக விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் முதல-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

    விஜயாப்புரா மாவட்டத்தில் ரூ.220 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. 727 ஏக்கர் அளவில் இந்த விமான நிலையம் அரசு மற்றும் தனியாருடன் சேர்ந்து அமைக்கப்படுகிறது. விஜயாப்புரா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் சுற்றுலா துறை, விவசாயம் வேகமாக வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும். விமான நிலையம் அமைவதன் மூலம் விஜயாப்புரா மாவட்டம் வேகமாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஏற்கனவே கலபுரகி, பீதரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவமொக்கா விமான நிலையம் கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. விஜயாப்புரா விமான நிலையமும் கூடிய விரைவில் நிறைவு பெறும். திட்டமிட்டபடி விமான நிலைய பணிகளை எந்த விதமான காலதாமதமும் இன்றி விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விஜயாப்புரா மாவட்ட மக்களின் கோரிக்கையும் நிறைவேறி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேசும் போது, விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று, மாவட்ட மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் வசதி படைத்தவர்களாக அமைக்கப்படவில்லை. விமான நிலையம் அமைவதன் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு முன் மாதிரியாக விஜயாப்புரா மாறும்.

    20 ஆண்டுகளுக்கு முன்பே விஜயாப்புரா தோட்ட கலைக்கு உகந்த மாவட்டம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது விமான நிலையம் அமைவதன் மூலம் தோட்ட கலைத்துறையில் விஜயாப்புரா இன்னும் பல வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என்றார்.
    Next Story
    ×