search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

    இந்திய மண்ணில் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

    இந்திய மண்ணில் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று மாநிலங்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மே மாதம் 5-ந்தேதி, லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால் பெரும் மோதல் வெடித்தது. சீன துருப்புகளுக்கு இந்திய படை வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்தது.

    இன்னொருபுறம் இருதரப்புக்கும் இடையே தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்த தருணத்தில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் படைகளை விலக்கிகொள்ளவும், கட்டுமானங்களை அகற்றவும் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாங்கோங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் அமைத்த கட்டுமானங்களை அகற்றுவதற்கும் இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுபற்றி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு முதல், நாம் சீன தரப்புடன் தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேசி வருகிறோம். இதில் நாம் 3 கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம்.

    அவை, இரு தரப்பினரும் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை பராமரிக்க வேண்டும். ஒரு தலைப்பட்சமாக அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மாற்ற முயற்சிக்க கூடாது. இரு தரப்பிலும் செய்து கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களும், புரிந்து கொள்ளுதல்களும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

    அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மோதல் புள்ளிகளில் படைகளை வாபஸ் பெறுவதை உறுதி செய்வதற்காக, இரு தரப்பு படைகளும் நெருக்கமாக உள்ளன. 2020-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட முன்னோக்கிய நகர்வுகளை காலி செய்து, நிரந்தரமானதும், ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தளங்களுக்கு படைகள் திரும்பிச்செல்ல வேண்டும்.

    சீன தரப்பினருடனான பேச்சுவார்த்தைக்கான நமது அணுகுமுறையும், உத்தியும் பிரதமரின் வழிகாட்டுதலால் அமைந்தவை ஆகும். நாம் நமது இந்திய மண்ணில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது நம்முடைய உறுதியும், அணுகுமுறையும் பலன்களை அளித்தன.

    இதுவரை இருதரப்பு மூத்த தளபதிகள் மட்டத்தில் 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய சீன விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்ககான செயல்பாட்டு செயல்முறையின் கீழ், இரு தரப்பிலும் தூதரக ரீதியிலும் பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன.

    நாம் நன்றாக சிந்தித்து மேற்கொண்ட அணுகுமுறையின் விளைவாகவும், சீன தரப்பிடம் தொடர்ச்சியாக நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் விளைவாகவும், பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த சபைக்கு தெரிவித்துக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பாங்கோங் ஏரி பகுதியில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக்கொண்டு விட்ட 48 மணி நேரத்திற்குள் மூத்த தளபதிகளின் அடுத்த கூட்டத்தை கூட்டி, எஞ்சிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கவும் பேராசை உள்ளது.

    பாங்கோங் ஏரி பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதற்கு சீன தரப்புடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், இரு தரப்பினரும் முன்னோக்கி அமர்த்திய படைகளை பல கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் சரி பார்க்கப்படுகிற முறையில் திரும்பப்பெற வழிவகுத்துள்ளது.

    சீன படைகள் வடக்கு கரையில், பிங்கர் 8-க்கு கிழக்கே தங்கள் படையை வைத்திருக்கும். அதே போன்று இந்திய படைகள் பிங்கர் 3 அருகே தங்களது நிரந்தர தளத்தில், தான்சிங் தாபா போஸ்ட்டில் இருக்கும்.

    இதேமாதிரியான நடவடிக்கை தெற்குகரையிலும், இரு தரப்பிலும் எடுக்கப்படும். இரு தரப்பிலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் கட்டுமானங்களை செய்திருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். நிலப்பரப்புகள் மீட்டமைக்கப்பட வேண்டும்.

    பாரம்பரிய பகுதிகளில் ரோந்து செல்வது உள்பட வடக்கு கரையில் இரு தரப்பினரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

    இரு தரப்பிலும் தூதரக மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டை எட்டும்போதுதான், ரோந்து பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

    பாங்கோங் ஏரியின் வடக்கு கரையிலும், தெற்குகரையிலும் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது நேற்று (நேற்று முன்தினம்) தொடங்கி விட்டது. இது கடந்த ஆண்டு இரு தரப்பு மோதல்களுக்கு முன்னர் இருந்த பழைய நிலையை கணிசமாக திரும்பவும் கொண்டு வரும்.

    இந்த பேச்சுவார்த்தைகளின்போது நாம் எதையும் ஒப்புக்கொண்டு விட வில்லை.

    கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வேறு சில இடங்களில் படைகளை நிறுத்துதல் மற்றும் ரோந்துப்பணிகள் தொடர்பாக சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன என்பதையும் இந்த சபைக்கு தெரிவிக்கிறேன். சீன தரப்புடன் இனி நடத்துகிற பேச்சுவார்த்தையின்போது இதில் கவனம் செலுத்தப்படும்.

    இரு தரப்பினரும் விரைவாக முழுமையாக படைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும், இரு தரப்பும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். எனவே எஞ்சியுள்ள சிக்கல்களை தீர்த்து கொள்ளவும், சீனத்தரப்பு முழு நேர்மையுடன் நம்முடன் இணைந்து பணியாற்றும் என்பது நமது எதிர்பார்ப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×