search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்ட பட்ஜெட் - ப.சிதம்பரம்

    பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்ட பட்ஜெட் என்று மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசினார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்த பட்ஜெட்டை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்த பட்ஜெட், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்ட பணக்காரர்களின் பட்ஜெட். அதாவது, நாட்டின் 73 சதவீத செல்வ வளங்களை வைத்துள்ள 1 சதவீதம் பேருக்கான பட்ஜெட்.

    இதில் ஏழைகளுக்கு எதுவும் இல்லை. அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். பொருளாதார மந்தநிலை இல்லை என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆனால், கொரோனாவுக்கு முன்பே 2 ஆண்டுகளாக மந்தநிலை இருந்தது என்பதுதான் உண்மை.

    அந்த அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, செயல்திறனற்ற பொருளாதார நிர்வாகம் நிலவியது. ‘செயல் திறனற்ற’ என்று நான் பயன்படுத்திய வார்த்தைக்கு நிதி மந்திரி எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால், சபையில் கடுமையான வார்த்தையை நான் பயன்படுத்த முடியாது. அதனால், எனக்கு தெரிந்த மென்மையான வார்த்தையை பயன்படுத்துகிறேன்.

    இதற்கு என்ன அர்த்தம் என்றால், 2017-2018 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.131 லட்சம் கோடியாக இருந்தது. அதன்பிறகு உயர்ந்து வந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.130 லட்சம் கோடியாக இருக்கும். ஆகவே, 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இடத்துக்கே நாம் போகப்போகிறோம் என்ற அர்த்தத்தில்தான் இதை சொன்னேன்.

    பொருளாதாரத்தை உயர்த்த தேவையை அதிகரிக்க வேண்டும் என்று உலக பொருளாதார வல்லுனர்கள் பலர் கூறுகிறார்கள். தேவையை அதிகரிக்க ஏழைகள் கையில் பணத்தை கொடுக்க வேண்டும். அதை அரசு செய்ய தவறி விட்டது.

    கடந்த 36 ஆண்டுகால அனுபவத்தில் இருந்து நீங்கள் இன்னும் பாடம் கற்கவில்லை. அதனால் மேலும் 12 மாதங்கள் வீணாக போகப்போகிறது. ஏழைகள் பாதிக்கப்படப் போகிறார்கள்.

    தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேவைகளே இல்லாதநிலை உள்ளது. அப்படியானால், உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா போன்ற பின்தங்கிய மாநிலங்கள் எப்படி சமாளிக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் பெரும் பகுதிகளை புறக்கணித்து விட்டீர்கள். பிறகு இது யாருக்கான பட்ஜெட்?

    இந்த ஆண்டு இறுதியில் 14.8 சதவீத வளர்ச்சி எட்டப்படும் என்று அரசு முதலில் இலக்கு நிர்ணயித்தது. தற்போது, 11 சதவீதம் என்று கூறியுள்ளது. ஆனால், வளர்ச்சி 9.4 சதவீதம் அல்லது 8.4 சதவீதம்தான் இருக்கும். என் வாா்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் எண்களை வைத்தே தற்பெருமை கொள்ளாதீர்கள். ஸ்திரமான வளர்ச்சியை அடைய இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் பிடிக்கும்.

    எனவே, தற்பெருமையை கைவிட்டு, அர்த்தமுள்ள விமர்சகர்களின் ஆலோசனைகளை பெறுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள். பட்ஜெட்டை வாபஸ் பெறுங்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
    Next Story
    ×