search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிதரூர்
    X
    சசிதரூர்

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை

    குடியரசு தின வன்முறை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதுகுறித்து டுவிட்டரில் உண்மைக்கு மாறான கருத்தை பதிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிரிணால் பாண்டே உள்ளிட்ட 6 பேர் மீது நொய்டா, டெல்லி, மத்தியபிரதேச போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சசி தரூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், ‘கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

    இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ‘இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை இவர்களை கைது செய்ய போகிறீர்களா?’ என கேட்டார். அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்று கோரினார்.

    இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ‘வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைக்க முடியாது, கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×