search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் தீப் சித்து
    X
    நடிகர் தீப் சித்து

    குடியரசு தின வன்முறை- பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

    விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டதாக நடிகர் தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது.  இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    பேரணிக்கு அனுமதிக்கப்படாத இடத்தில், போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிய 14 டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 80க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் மதக் கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது. மேலும், ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டதாக நடிகர் தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×