search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்: எடியூரப்பா

    போலீசார் எப்போதும் கடமை தவறாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும். நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    போலீஸ் துறையில் சிறப்பான முறையில் சேவையாற்றிய போலீசாருக்கு முதல்-மந்திரி பதக்கம் வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, போலீசாருக்கு முதல்-மந்திரி பதக்கங்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ போலீசார் தான் காரணம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் பகல்-இரவாக உழைக்கிறார்கள். போலீசார் எப்போதும் கடமை தவறாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும். அவ்வாறு நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். போலீசாருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    கர்நாடகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு வீட்டு வசதிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது. சமீபத்தில் 11 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு-2025 திட்டத்தில் ரூ.2,000 கோடி செலவில் 10 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.667 கோடியில் ஒரு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால், கர்நாடகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும். அவசர சேவைக்காக 150 வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    அதைத்தொடர்ந்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

    போலீஸ் துறையில் நவீன தொழில்நுட்பங்களை மூத்த அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். அதன் பயன் குறித்து இளம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அரசின் மென்பொருள்களை சிலர் முடக்குகிறார்கள். அத்துடன் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களையும் திருடுகிறார்கள். இதன் மூலம் நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    இதற்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கடிவாளம் போட வேண்டும். போலீஸ் துறைக்கு அதிக நவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. தினசரி வரும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள போலீஸ் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். திருட்டு, கொள்ளையில் ஈடுபடுபவர்கள், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். எந்த நேரத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு போலீசாருக்கு இருக்க வேண்டும்.

    நாட்டிலேயே கர்நாடக போலீசாருக்கு அதிக மரியாதை உள்ளது. நமது போலீசார் நேர்மை, ஒழுக்கம், கடமை, சாகசத்திற்கு பெயர் பெற்றவர்கள். இதை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் குற்றங்களை தடுப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. முன்வரும் நாட்கள் இன்னும் சவால்கள் நிறைந்தவையாக இருக்கும். அதனால் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
    Next Story
    ×