search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவை வரவேற்று தமிழில் வைக்கப்பட்டு இருந்த பேனரை கன்னட அமைப்பினர் தீ வைத்ததை படத்தில் காணலாம்.
    X
    சசிகலாவை வரவேற்று தமிழில் வைக்கப்பட்டு இருந்த பேனரை கன்னட அமைப்பினர் தீ வைத்ததை படத்தில் காணலாம்.

    சசிகலாவை வரவேற்று தமிழில் வைத்த பேனர்களை கிழித்து தீ வைத்த கன்னட அமைப்பினர்

    சசிகலாவை வரவேற்று தமிழில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை கிழித்து கன்னட அமைப்பினர் தீ வைத்த சம்பவம் பெங்களூரு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதே நேரம் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர் பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட சசிகலா சென்னைக்கு செல்லாமல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா கோடகுர்கி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார். நேற்று காலை அவர் சொகுசு விடுதியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் சசிகலாவை வரவேற்க நேற்று முன்தினம் இரவே சொகுசு விடுதி முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர். மேலும் சசிகலாவை வரவேற்கும் விதமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தமிழில் எழுதப்பட்டு இருந்த பேனர்களை, சொகுசு விடுதி முன்பு ஆதரவாளர்கள் கட்டி இருந்தனர்.

    இதுபற்றி அறிந்த கன்னட அமைப்பினர் அங்கு சென்று தமிழில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை பிளேடால் கிழித்து எறிந்தனர். மேலும் அந்த பேனர்களுக்கு தீயும் வைத்தனர். பின்னர் தமிழில் பேனர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கோஷமும் எழுப்பினர்.

    இதுபற்றி அறிந்த தேவனஹள்ளி போலீசார் அங்கு சென்று கன்னட அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சசிகலா தங்கி இருந்த சொகுசு விடுதி முன்பு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
    Next Story
    ×